
கால் நூற்றாண்டு கால
விடுதலைப் போராட்டம்
எமக்குத் தந்த பரிசு
மனித அரவமற்ற சுடுகாடும்,
அரைகுறையாய்க் கிண்டிய கிடங்கினுள்
அவசரமாய்ப் புதைத்த மனிதப் பிண்டங்களும்
எலும்புக் கூடுகளும் மண்டையோடுகளுமே!
உண்ண உணவின்றி
அணிய உடையின்றி
ஒதுங்கக் கூரையின்றி
பரட்டையாய் கலைந்த
கேசத்துடனுன் நாடோடியாய்
எலும்புக் கூடாய் நலிந்ததே
நம்மினம்!
துப்பாக்கி வேட்டுக்கும்
செல் வீச்சுக்கும் பயந்து
பதுங்குகுழியில் பதுங்கிய
எம்மினம் அதனுள்ளே
மௌனித்ததே!
ஊனமுற்ற உடலங்களும்
உயிரற்ற சடலங்களும்
பட்டினியால் நலிந்த தேகங்களும்
குண்டு துளைத்த தேசமும்
கால் நூற்றாண்டு போராட்டத்தின்
விளைச்சலே!
------ஈழவன்------

