தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

சுனாமியின் நான்காம் ஆண்டு நினைவாக "அகாலவேளை" சிறுகதை

அகாலவேளை

தலைக் கேசத்தை ஒரு கையால் கோதியவாறு, கழுத்திலே தொங்கவிடப்பட்டிருந்த கைக் கட்டின் வேதனையை மறந்து அழுத முகத்துடன் தாயின் வரவுக்காக ஏங்கிக் காத்திருந்தாள் வசந்தியின் மகள்.

வசதி வாய்ப்பான குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் வசந்தி, கம்பீரமான அழகான கணவனையும் ஆசைக்கு ஒரு மகனையும் ஒரு மகளையும் கொண்ட இனிமையான குடும்பம், சொற்ப காலத்திற்குள் அழகான நவீன வீட்டை நிர்மாணித்து வசந்தியின் மீதுள்ள காதலினால் அவ் வீட்டுக்கு "வசந்த மாளிகை" என நாமமும் சூட்டினான் வசந்தியின் கணவன் ஸ்ராலின்.

சைவப் பெண்ணான வசந்திக்கும் கிருஸ்தவனான ஸ்ராலினுக்கும் பாடசாலையில் ஒன்றாகப் படித்த காலத்தில் இருந்தே ஏற்பட்ட நட்பு இறுதியில் காதலாகி களியாணத்தில் முடிந்தது, உற்றார் உறவினர்கள், நண்பர்கள், ஊரவர்கள், தெரிந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டு சிறந்த பாதிரியார்களின் அசீர்வாதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது தான் ஸ்ராலின் வசந்தி திருமணம். திருமணத்துக்கு வருபவர்களை மகிழ்ச்சிபடுத்துவதற்காக இன்னிசைக் கச்சேரியும் உண்ணுவதற்கு சுவையான சிறந்த சிற்றுண்டி மற்றும் உணவுகளெல்லாம்... நினைக்கும் போது இப்போதும் நாவூறுகிறது.

"ம்ம்…… எழும்புங்கோ சேர்ச்சுக்குப் போக வேணும்" கணவனைத் தட்டி எழுப்பி அவனது கன்னத்தை மெதுவாக வருடி விட்டு குளியல் அறைக்குள் சென்றாள் வசந்தி. குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கிறதே, நான் தான் எழும்ப பிந்தி விட்டேனோ, அவசர அவசரமாகக் குளித்து விட்டு குசினிக்குள் சென்று தேநீருடன் வெளியே வந்த போது குழந்தைகளும் கணவரும் புத்தாடை அணிந்து அழகாக இருந்தனர், உண்மையில் அந்த பிரமனுக்கே நன்றி சொல்ல வேண்டும்.

நேற்றைய இரவு நத்தார் தினப் பூசைக்குப் போட்ட உடுப்பை அணிந்து வசந்தியும் குடும்பத்துடன் தேவாலயத்துக்குச் சென்றாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருந்தது.

பூசை ஆரம்பித்து பங்குத் தந்தையினால் அப்பம் பங்கிடப்பட்ட அவ்வேளையில் பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவை நினைத்து கைகளை அகல விரித்து கண்களை மூடி மக்கள் அனைவரும் பிராத்தனையில் ஈடுபடலாயினர், மயான அமைதி நிலவியது அத் தேவாலயத்தில். அவ் அமைதி நேரத்தில் பாரிய இரைச்சல் வெளியே கேட்டது, அனைவரும் திரும்பி வீதியைப் பார்க்க, ஊரவர்கள் எல்லோரும் அழுத வண்ணம் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

"கடல் ஊருக்குள்ள வந்திற்று ஓடுங்கோ, ஓடுங்கோ" என அழுதவாறு மக்கள் உடுத்த உடையுடன் ஓடிக்கொண்டிருந்தனர், எதையும் சிந்திக்க நேரம் இருக்கவில்லை, "வசந்தி கெதியா வா என கணவன் அழைத்ததும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மகளை மறு கரத்தில் பிடித்தவாறு குறு நடையாய் ஸ்ராலின் பின்னால் வெளியே சென்றேன், தெருவில் கால் வைக்கவே இடமில்லை சன நெரிசல் அளவுக்கு அதிகமாக இருந்தது, சைக்கிளில் ஏறி மிதிக்க தயாராக காத்திருந்தார் ஸ்ராலின், நானும் மகனும் பின்னால் இருக்கும் கரியரிலும், மகள் முன்னாலும் இருக்க சைக்கிள் மெதுவாக நகர்ந்தது.

வசந்தியின் வாயில் இருந்து யேசுவே, யேசுவே……. எனும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது, அந் நேரம் பிள்ளையாரே என்றும் முருகா என்றும் ஓடிவரும் ஒவ்வொருவரும் தலையிலடித்து அழுது கொண்டு ஓடுவது இரைச்சலுடன் இரைச்சலாய்க் கேட்டது. பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

எனது கண்களை என்னால் நம்பவே முடியவில்லை, கடல் மலை போல் எங்களைத் துரத்திக் கொண்டே வந்தது, "அப்பா சைக்கிளை கெதியா மிதியுங்கோ, கடல் பின்னால் வந்துட்டுது, கடவுளே" எனச் சொல்லி வாய் மூடுவதற்கு முன் ... .... ... கடல் எங்களை மூடி விட்டது, கையில் இருந்த எனது குழந்தையை ஒரு கையாலும் மறு கையால் கணவனையும் இறுகப் பிடித்துக் கொண்டேன், எங்களுக்குப் பின்னால் ஓடி வந்தவர்களின் ஒரு பகுதி கடலலையிலே அடிபட்டு எங்களுக்கு மேலாக நீரில் இழுபட்டுச் செல்வதை உணரத்தக்கதாக இருந்தது.

குழந்தையையும் கணவனையும் இறுகப் பிடித்திருந்த கை நழுவி விட்டதன் பின் நடந்தது எதுவுமே வசந்திக்குத் தெரியாது. கடற் பேரலை வசந்தியை தூரத்தே கொண்டு வீசிச் சென்றது. வசந்திக்குத் தலையிலும் காலிலும் பலத்த வெட்டுக்காயம், அதைப்பற்றி சிந்திக்காமல், அருகே உயிர் தப்பிக் காணப்பட்டவர்களிடையே கணவனையும் குழந்தைகளையும் தேடலானாள், அவர்களைக் காணாததால் கண்டவர்களிடமெல்லாம் விசாரித்தாள். எல்லோரும் பதில் சொல்லக் கூடிய நிலையில் இல்லை, மீண்டும் சுனாமி வந்து விடுமோ எனும் அச்சத்தில் அவசர அவசரமாக கையில் கிடைத்தவற்றுடன் ஓடிக் கொண்டிருந்தனர்.

வைத்தியசாலையில் காயப்பட்ட சிலரையும் இறந்தவர்கள் பலரையும் வைத்திருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்த்த போது மகள் காயத்துடன் அவசரப் பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தாள், மனம் சற்று ஆறுதலடைய அன்புக் கணவனையும் ஆசை மகனையும் தேடினாள் வசந்தி, காயப்பட்டவர்களின் பகுதியில் காணப்படாததால் மனதைத் தேற்றிக் கொண்டு மரணித்தவர்களின் பகுதிக்கு ஜடமாகச் சென்றாள், அவளது உள் மனமோ கடவுளே எனக்கு பிரிவு வரக்கூடாது, எனது கணவனும் மகனும் உயிரோடு இருக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தது.

மனித உடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஒழுங்கற்றுப் போடப்பட்டிருந்தது, இந்த உடலங்களுக்கு மத்தியில் ஸ்ராலினையும் குழந்தையையும் எப்படித் தேடுவாள் வசந்தி, அவளும் மெல்லிய மனம் கொண்ட பெண் தானே, மனதைக் கல்லாக்கிக் கொண்டு கிடத்தப் பட்டிருந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டி தனது உறவுகளைத் தேடினாள். முகம் சிதைந்த நிலையில் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கொண்டு ஸ்ராலினை அடையாளம் கண்டு ஓவென்று கத்தினாள் வசந்தி, மகனின் உடலத்தைக் காணவே இல்லை.

கண்ணீர் அவளையும் மீறி ஓடிக் கொண்டிருந்தது, பைத்தியம் பிடித்தவள் போலானாள்,வசந்திக்கு அனுதாபம் தெரிவிக்க யாருமே இல்லை, ஏனையோர்களும் வசந்தியைப் போல் தங்களுக்குத் தேவையானவர்களைக் காணாமல் அழுதழுது தேடிக் கொண்டிருந்தனர், வசந்தி மனதைத் திடப் படுத்திக் கொண்டாள், தனது இரு கைகளாலும் கண்களைத் துடைத்து விட்டு கணவனின் உயிரற்ற சடலத்தை வாரித் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

மரண வீட்டுக் கிரியை செய்ய நேரமின்றி தனி ஒருத்தியினால் துணிச்சலாக ஸ்ராலினின் பூவுடல் அவசர அவசரமாக முன்பின் தெரியாத ஒரு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது, இந்தச் சூழலில் மற்றவர்களும் தங்களது இறந்த உறவுகளை கூட்டமாகவும், தனியாகவும் விதைத்துக் கொண்டிருந்தார்கள், நேரமின்மையால் பிரேதங்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு புதைகுழியில் ஒன்றாக கொட்டப்பட்டு மணலால் மூடப்பட்ட சம்பவங்களும் நடந்து கொண்டிருந்தது.

கணவனின் இழப்பின் பின் வாழ வழி தெரியாமல் திக்குமுக்காடி நிற்கும் வசந்திக்கு துன்ப துயரங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன, அழகியான வசந்திக்கு உறவு என்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரமே தான், வசதியாக வாழ்ந்த அன்பான குடும்பம் சுனாமியால் தாக்குண்டு சீரழிந்து நிற்கின்றது.

குடிசை வாழ்க்கை, பொது மலசல கூடம், பொதுக் கிணறு போன்றவற்றுக்குப் பழக்கப் படுத்திக் கொண்டாள், அரசாங்கம் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் கொடுக்கும் நிவாரணப் பொருட்களை வாங்கவெனச் செல்லும் போதும் வசந்தியை ஆண் வெறியர்கள் சிலர் சீண்டிப் பார்க்கவும் தவறவில்லை, வக்கிரம் கொண்டவர்களின் காமப் பார்வையில் இருந்து தப்புவதற்காக வசந்தி படும்பாடு சொல்லியடங்காது. இளம் பெண்ணான வசந்தி விதவையாக இருப்பது பெண் பித்தர்களுக்கு சக்தியூட்டுவதாகவே அமைகின்றது, சிநேகிதம் பிடிக்கவென எத்தனையோ பேர் பின்னால் அலைவது வசந்திக்குத் தெரியாததல்ல.

அவளின் சிந்தனை எல்லாம் காணாமல் போன தனது ஆண் குழந்தையையும், அன்புக் கணவனைப் பற்றியதுமே, வேற்றுச் சிந்தனைக்கு அவளின் மனம் தாவவில்லை, சந்தோசமாக குறைகள் ஏதுமின்றி தன்னையையும் குழந்தைகளையும் வைத்து பாதுகாத்த அன்புக் கணவன் ஸ்ராலினை நினைக்காத நாளே இல்லை எனலாம், கடல் துரத்தி வந்த அந்த அகாலவேளையிலும் எங்கள் உயிரைப் பாதுகாக்க ஸ்ராலின் பட்ட அவஸ்த்தையை நினைத்து நினைத்து அவளது மனம் படும் அகோரத்தை விபரிக்க முடியாது.

"நேரம் பதினொரு மணியாகிற்று வாங்க அம்மா நித்திரை கொள்ளுவம்", மகள் அருகில் வந்து தாயின் கண்களில் வடியும் கண்ணீரைத் துடைத்து அழைத்துச் செல்வாள் நித்திரைக்கு, இது சுனாமி அவளுக்கு கொடுத்துச் சென்ற பரிசில், தினமும் நிகழும் நிகழ்வு இது, அவளது கண்கள் என்ன கடலா.

மகள் மூன்றாம் தரத்தில் பாடம் படிக்கிறாள், அகதிமுகாமில் இருந்து நூறு மீற்றர் தூரத்தில் தான் அவளது பாடசாலை, வகுப்பில் முதலாம் பிள்ளையும் அவளே. வசந்திக்கு சொந்தமென்றிருப்பது மகள் ஒருத்தி மாத்திரம் தான், அவளை நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய ஆளாகப் பார்க்க வேண்டுமென்பது வசந்தியின் தற்போதைய இலட்சியம்.

காலையில் மகளைக் குளிக்க வைத்து சுத்தமான ஆடை அணிவித்து உணவூட்டி அயலில் உள்ள ஏனைய பிள்ளைகளுடன் தனது செல்ல மகளையும் வழமை போலவே அன்றும் பாடசாலைக்கு அனுப்பி வைத்தாள் வசந்தி.

"வசந்தி அண்டி.... பக்கத்து குடிசையில் வசிக்கும் அன்னம்மாவின் மகள் கூப்பிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து வினாவியதைத் தொடர்ந்து மயக்கமுற்றாள் வசந்தி, இடி மேல் இடி அவளது தலையிலே விழுவதாக நினைத்தாள், பாடசாலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பும் போது தெருவால் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு காயப்பட்டு பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட செய்தி மேலும் அவளைப் பாதித்தது.

பஸ் போக்குவரத்து சீரில்லாத இக் கிராமத்தில் இருந்து நினைத்தவுடனே நகரத்தில் உள்ள வைத்தியசாலைக்கு போய் வருவதென்பது இலேசுப்பட்ட காரியமா, அழுதாள் விடியும் வரையும் அழுதாள். சேவல் கூவுகின்றது, மாட்டு வண்டியொன்று கடவென்று போகும் சத்தமும் கேட்கிறது, அகதிக் குடிசைகளுக்கு பொழுது விடிந்ததை தினமும் பறைசாற்றும் கடிகாரங்கள் இவை. அழுதழுது கண்கள் விறைத்துப் போய் நித்திரை இல்லாமல் இருந்த வசந்தி, எழும்பி அடுப்படிக்குச் சென்று கரித்துண்டொன்றை வாயிலிட்டு பல்லை மினுக்கி, முகம் கழுவி வெளியே வந்து அடிவானத்திலுள்ள விடிவெள்ளியைப் பார்த்து மீண்டுமொருமுறை நேரத்தை உறுதிப்படுத்திக் கொண்டு அருமை மகளைப் பார்க்க போய்க் கொண்டிருக்கிறாள் தெருவை நோக்கி...

(இச் சிறுகதை இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

சுனாமிப் பேரலையில் மரணித்த சொந்தங்கள் அனைவருக்கும் "களத்துமேட்டின்" கண்ணீர் அஞ்சலி!

வானவில் வானவில்!!


பூகோளத்தின் பிரதிபலிப்போ
பூத்திருக்கும்
வர்ணக் கற்றைகள்!

மழையின் வரவால் குதுகலிக்கும்
வர்ணனின்
வானப் பதிவு!

வானில் காவடி வடிவில்
கண்ணைக் கவரும்
ஸப்த வர்ணங்கள்!

ரவிவர்மன் தூரிகையில்
பட்டுச் சிதறிய
நிறக் கலவைகள்!

-ஈழவன் களத்துமேடு-

(சோதரி ஹேமா துலாவுக்கு விளக்கம் கேட்டிருந்தார் அவருக்கு இப்படம் சமர்ப்பணம்)

எம்மவருக்கு ஏது நிம்மதி


யுத்தத்தை வேண்டுமென்றே
எம்மீது சுமையேற்றி
அதிலே குளிர் காய்ந்து
அதிகார சிம்மாசனத்துக்காய்
ஆயிரம் தலை கொய்து
அதன்மீதேறி நின்று
அர்த்தமற்று
சந்தற்பவாத அரசியல் பேசி
மேய்ப்பர்கள் தாமேயென்று
இன்னும் தலையெடுக்க
துணிந்து நிற்பவர்
மனம் மாறும் வரை
எம்மவருக்கு ஏது நிம்மதி!

08.09.2008 "ஜீவநதி" வலைப்பூவில் தோழர் தங்கராசா ஜீவராஜ் பதிவு செய்துள்ள "யுத்தத்தின் முடிவினைத் தேடும் சமாதானத்துக்கான போர்... யுத்தத்தின் முடிவினைக் கண்டவர் யார்?" எனும் கவிதையைப் பார்த்த போது நானும் பங்கிற்கு ஏதும் எழுதலாமே என்று நினைத்து "எம்மவருக்கு ஏது நிம்மதி" எனும் தலைப்பில் பதிவு செய்துள்ளேன்.

என்ன நியாயம்? - கவிதை

"வானம் வெளித்த பின்னும்" வலைப்பூ பதிவர் தோழர் ஹேமாவின் "நீயும் தமிழன் தான்..."
எனும் கவிதைக்கு மறுப்புக் கவிதை.


என்ன நியாயம் ?

எமக்காகத் தளம் தந்து
ஈழப் போருக்கு உரமிட்டு
அவசரமென ஆகாயத்தால் வந்து
பூமாலையாய் ஊண் தந்தவர்
இந்திய மக்களே!

கண்ணீர்த்துளி வடிவ இலங்காவின்
தமிழ் வதைப்புக்கெதிராகக் குரலிட்டு
கடவுச்சீட்டின்றி அகதியாய் தடம்பதிக்க
அனுமதி தந்து உயிர் காப்பவரும்
இந்திய மக்களே!

குரல்வளையை நெரிக்க முனைந்ததால்
குப்புற வீழ்ந்தோமே எனினும்
கண்ணைக் குத்திக்கொண்ட எம்மை
அணைக்க முனைவதும்
இந்திய மக்களே!

ஈழமொன்று அமைவதானால்
பச்சைக்கொடி காட்டவேண்டியவர்கள்
அணுவாயுதத்தால் அண்டத்தையே அதிரவைத்த
ஆசியாவின் வல்லரசு
இந்திய மக்களே!

கல்லைப் பார்த்து காலை வைக்காமல்
அடித்துவிட்டதே கல்லென
கல்லை நொந்து கொள்வதில்
என்ன நியாயம்!

ஆழம் பார்த்துக் கால் வைக்காமல்
ஆழ்ந்தபின் ஆழ்ந்து விட்டோமேயென
நொந்து கொள்வதில்
பயனேது!

எங்கே தேன்கூடு !

தேன்கூட்டைக் காணவில்லை எங்கே போய் விட்டது. தெரிந்தவர்கள் கூறுங்கள் !


எங்கே



காலையில் இருந்து
தேடுகின்றேன்
காணவில்லை!

வலைப்பூக்களின்
தொகுப்பை
வகைவகையாய் இன்று
காணவில்லை !

தேடுகின்றேன் அடிக்கடி
இணையத்திலின்று ஓடி வா
காணவில்லை !

இலக்கியமேடு !

படைப்பிலக்கியத்தில்
எனக்கு
உண்டான சிறு
நாட்டத்தின் தாக்கமே
இலக்கியமேடு !

பார் போற்றும் மானிடன் - கவிதை



பார் போற்றும் மானிடன்


வியர்வை சிந்தி
கோடரி கத்தி கொண்டு
காடு வெட்டி கழனியாக்கி
எருதுடன் ஏருழுது
முட்கிழித்து இரத்தம் கசிய
வாய்க்கால் வரம்பு கட்டி
மழையை நம்பி
நெல் விதைத்து
பயிர் பார்த்து
காலத்தே உரமிட்டு
தங்கப்பாளமாம்
செந்நெல் கண்டு
வானத்தைப் பார்த்து
கதிராடாமல்
வேளாண்மை வெட்டி
ஒன்று சேர்த்து
சூடடித்துப் பொலி தூத்தி
பொன் மணிகள் சிந்தாமல்
மூட்டை மூட்டையாய்
பட்டறையிலிட்டு
மானிடனின் பசி போக்க
ஓயாமல் உழைக்கும்
வேளாளா நீ தான்
பார் போற்றும்
மானிடன் !

---------------களத்துமேடு------

ஓ தமிழீழமே ! - கவிதை


ஓ தமிழீழமே !

உன்னை நேசித்ததால்
உயிரைத் துறந்த
உதிரத்தை வார்த்த
உடமைகள் இழந்தவர்கள்
ஏராளம் ஏராளம் ஏராளம்!

இன்றும் இன்னும்
தெருவிலே வேட்டொலி
சொறிநாயிலும் கேடாய்
ரெத்தம் சொட்ட
துடிக்குது மானிடம்!

அப்பாவென்றும்
அம்மாவென்றும்
அண்ணனென்றும்
அக்காவென்றும்
தம்பியென்றும்
தங்கையென்றும்
ஓலமிடுதே ஈழதேசம்!

துப்பாக்கி கலாசாரம்
துளிர்த்ததால்
வேண்டாம் போர்
நிம்மதியே போதுமென
ஒதுங்கியோர் பலர்!

சொந்த இனத்துக்குள்ளே
குரோதம் வளர்ந்து
குறி வைப்பதும்
கொன்றொழிப்பதும்
வாடிக்கையானதால்
இரத்தத்தில் தோய்ந்ததே
ஈழ பூமி!

----------------களத்துமேடு-----

செல் வந்த இவ்வூரில் ! - கவிதை



செல் வந்த இவ்வூரில் !

செல்லாதே கதிரவனே
உன் கதிரின் வீச்சம்
கடுகளவும் சுடவில்லை!

மீண்டும் வருவேனென
மறையும் நீ
சிரித்துச் போகின்றாய்!

நானோ
நாளை இருப்பேனோ
எனக்கே தெரியவில்லை!

கண்ணீரின்றி,
உப்புக் கரித்த முகத்துடன்
நிற்கின்றேன்!

செல் வந்த இவ்வூரில்
ஓடித் தப்பலாம்
பகலிலே!

காரிருளில்
செல்வந்தால்
எங்கோடுவேன்!

செல்லாதே கதிரவனே
உன் கதிரின் வீச்சம்
கடுகளவும் சுடவில்லை!

-------------------களத்துமேடு-