தோழரே வணக்கம் களத்துமேடு, களமேடு, இலக்கியமேடு இவை எனது சக பதிவுகள்.

என்ன நியாயம்? - கவிதை

"வானம் வெளித்த பின்னும்" வலைப்பூ பதிவர் தோழர் ஹேமாவின் "நீயும் தமிழன் தான்..."
எனும் கவிதைக்கு மறுப்புக் கவிதை.


என்ன நியாயம் ?

எமக்காகத் தளம் தந்து
ஈழப் போருக்கு உரமிட்டு
அவசரமென ஆகாயத்தால் வந்து
பூமாலையாய் ஊண் தந்தவர்
இந்திய மக்களே!

கண்ணீர்த்துளி வடிவ இலங்காவின்
தமிழ் வதைப்புக்கெதிராகக் குரலிட்டு
கடவுச்சீட்டின்றி அகதியாய் தடம்பதிக்க
அனுமதி தந்து உயிர் காப்பவரும்
இந்திய மக்களே!

குரல்வளையை நெரிக்க முனைந்ததால்
குப்புற வீழ்ந்தோமே எனினும்
கண்ணைக் குத்திக்கொண்ட எம்மை
அணைக்க முனைவதும்
இந்திய மக்களே!

ஈழமொன்று அமைவதானால்
பச்சைக்கொடி காட்டவேண்டியவர்கள்
அணுவாயுதத்தால் அண்டத்தையே அதிரவைத்த
ஆசியாவின் வல்லரசு
இந்திய மக்களே!

கல்லைப் பார்த்து காலை வைக்காமல்
அடித்துவிட்டதே கல்லென
கல்லை நொந்து கொள்வதில்
என்ன நியாயம்!

ஆழம் பார்த்துக் கால் வைக்காமல்
ஆழ்ந்தபின் ஆழ்ந்து விட்டோமேயென
நொந்து கொள்வதில்
பயனேது!

எங்கே தேன்கூடு !

தேன்கூட்டைக் காணவில்லை எங்கே போய் விட்டது. தெரிந்தவர்கள் கூறுங்கள் !


எங்கே



காலையில் இருந்து
தேடுகின்றேன்
காணவில்லை!

வலைப்பூக்களின்
தொகுப்பை
வகைவகையாய் இன்று
காணவில்லை !

தேடுகின்றேன் அடிக்கடி
இணையத்திலின்று ஓடி வா
காணவில்லை !

இலக்கியமேடு !

படைப்பிலக்கியத்தில்
எனக்கு
உண்டான சிறு
நாட்டத்தின் தாக்கமே
இலக்கியமேடு !

பார் போற்றும் மானிடன் - கவிதை



பார் போற்றும் மானிடன்


வியர்வை சிந்தி
கோடரி கத்தி கொண்டு
காடு வெட்டி கழனியாக்கி
எருதுடன் ஏருழுது
முட்கிழித்து இரத்தம் கசிய
வாய்க்கால் வரம்பு கட்டி
மழையை நம்பி
நெல் விதைத்து
பயிர் பார்த்து
காலத்தே உரமிட்டு
தங்கப்பாளமாம்
செந்நெல் கண்டு
வானத்தைப் பார்த்து
கதிராடாமல்
வேளாண்மை வெட்டி
ஒன்று சேர்த்து
சூடடித்துப் பொலி தூத்தி
பொன் மணிகள் சிந்தாமல்
மூட்டை மூட்டையாய்
பட்டறையிலிட்டு
மானிடனின் பசி போக்க
ஓயாமல் உழைக்கும்
வேளாளா நீ தான்
பார் போற்றும்
மானிடன் !

---------------களத்துமேடு------

ஓ தமிழீழமே ! - கவிதை


ஓ தமிழீழமே !

உன்னை நேசித்ததால்
உயிரைத் துறந்த
உதிரத்தை வார்த்த
உடமைகள் இழந்தவர்கள்
ஏராளம் ஏராளம் ஏராளம்!

இன்றும் இன்னும்
தெருவிலே வேட்டொலி
சொறிநாயிலும் கேடாய்
ரெத்தம் சொட்ட
துடிக்குது மானிடம்!

அப்பாவென்றும்
அம்மாவென்றும்
அண்ணனென்றும்
அக்காவென்றும்
தம்பியென்றும்
தங்கையென்றும்
ஓலமிடுதே ஈழதேசம்!

துப்பாக்கி கலாசாரம்
துளிர்த்ததால்
வேண்டாம் போர்
நிம்மதியே போதுமென
ஒதுங்கியோர் பலர்!

சொந்த இனத்துக்குள்ளே
குரோதம் வளர்ந்து
குறி வைப்பதும்
கொன்றொழிப்பதும்
வாடிக்கையானதால்
இரத்தத்தில் தோய்ந்ததே
ஈழ பூமி!

----------------களத்துமேடு-----

செல் வந்த இவ்வூரில் ! - கவிதை



செல் வந்த இவ்வூரில் !

செல்லாதே கதிரவனே
உன் கதிரின் வீச்சம்
கடுகளவும் சுடவில்லை!

மீண்டும் வருவேனென
மறையும் நீ
சிரித்துச் போகின்றாய்!

நானோ
நாளை இருப்பேனோ
எனக்கே தெரியவில்லை!

கண்ணீரின்றி,
உப்புக் கரித்த முகத்துடன்
நிற்கின்றேன்!

செல் வந்த இவ்வூரில்
ஓடித் தப்பலாம்
பகலிலே!

காரிருளில்
செல்வந்தால்
எங்கோடுவேன்!

செல்லாதே கதிரவனே
உன் கதிரின் வீச்சம்
கடுகளவும் சுடவில்லை!

-------------------களத்துமேடு-